

கடந்த 14 வாரங்களாகக் குடும்பம், கணவன் - மனைவி உறவு, அலுவலக நட்பு, குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசலைக் கையாளுவது, விட்டுக்கொடுத்தல், பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகள் எனப் பலவற்றைப் பற்றியும் நாம் சிந்தித்தோம். இனி நம் சமூகத்தில் நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றியும் அவை எப்படி நம்மையும், நம் குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்கின்றன என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்கப்போகிறோம் நண்பர்களே.
இப்போதெல்லாம் செய்தித்தாளைத் திறந்தாலே பக்கத்துக்குப் பக்கம் வன்முறைச் செய்திகள்தான் கண்ணில்படுகின்றன. சில செய்திகளைப் படிக்கிறபோதே உள்ளம் பதைபதைக்கிறது. என்ன செய்வோம் என்று பரிதவிக்கிறது. சில வாரங்களாக என் கவனத்தில் பதிந்த செய்திகளில் சிலதைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.