

முதுமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் பெண்கள் எதிர்கொள்கிற மிக முக்கியமான, உணர்வுபூர்வமான பிரச்சினை மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நிற்கும் தருணம். மாதவிடாயைப் பற்றிப் பேசுகிறபோது அது தரும் சில உபாதைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த நாளிலும் மெனோபாஸ் குறித்துப் போதுமான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மெனோபாஸ் எப்படிப்பட்ட சிக்கல்களை ஒரு பெண்ணுக்குள்ளும் அவளது குடும்பத்துக்குள்ளும் அவளைச் சார்ந்தவர் நடுவிலும் தோற்றுவிக்கிறது என்பதை அனுபவித்தவர்கள்கூட, படித்தவர்கள்கூட ஏனோ இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு தேவை என்று நினைப்பதும் இல்லை.
மெனோபாஸ் என்றால் என்ன? - பொதுவாக ஒரு இளம் பெண்ணுக்குப் பத்து வயதுக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் வரத் தொடங்கலாம். 38 வயதில் இருந்து 50 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் நிற்க முற்படலாம். மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் சமயத்தில் அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்த ஹார்மோன்கள் குறையத்தொடங்கும்போது அந்தப் பெண் எந்தவிதமான உடல் - மன உபாதைகளுக்கு ஆளாகிறாள் என்று பல குடும்பங்களில் யோசித்துகூடப் பார்ப்பதில்லை. என் உறவுக்காரப் பெண் ஒருவர் கிட்டத்தட்ட மனநோயாளி போலவே ஆகிவிட்டார். இரவு நேரத்தில், “என் கணவர் என்னைக் கொல்ல வருகிறார்” என்று அலறுவார்.