

இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்போம் நண்பர்களே. சிலரால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட விஷயம் அது. திருமணத்தைப் பற்றிப் பேசினோம், தாம்பத்யத்தைப் பற்றிப் பேசினோம், குடும்ப உறவுகள் குறித்துப் பேசினோம். இப்போது இன்னும் ஒரு முக்கியமான ஆனால், வருத்தமான பழக்கம் குறித்துச் சிந்திக்கப் போகிறோம்.
‘விதவன்’ என்கிற சொல்லே அகராதியில் இல்லாதபோது ‘விதவை’ என்கிற சொல் மட்டும் ஏன் என்று நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறோம்? நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு பெண், கணவனை இழந்துவிட்டால் அவள் மனம் முக்கியமாக உணர்வுகள்கூடவா செத்துப்போய்விடும்? கணவனை இழந்த பெண் மிகவும் அசுபமானவள், அபசகுனம், அவளைக் கண்ணால் பார்க்கவே கூடாது, நாம் எங்கேயாவது கிளம்பும்போது அவள் எதிரில் வரக் கூடாது, யார் முகத்திலும் விழிக்காமல் மூலையில் ஒதுங்கி இருக்க வேண்டும், தன்னை எந்தவிதமாகவும் அலங்கரித்துக்கொள்ளக் கூடாது, சத்தான உணவு சாப்பிடக் கூடாது.
இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் இன்னமும் பல இடங்களில் இருப்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஒரு விலங்கைவிடக் கேவலமாக நம் அம்மாவை, மனைவியை, சகோதரிகளை, மகள்களை, தோழிகளை ஆண்டாண்டு காலமாக இந்தச் சமுதாயம் நடத்துவதற்கு நாம் இடம் கொடுத்திருக்கிறோம். இது நியாயமா?
முற்றுப்புள்ளி வைப்போம்: கணவனைப் பறிகொடுத்துவிட்டோம், நம் உலகமே அஸ்தமித்துவிட்டது, காலடியில் இருக்கிற தரை பிளந்துவிட்டது, சாய்ந்துகொண்டு இருந்த சாய்மானம் தகர்ந்துவிட்டது, முதுகெலும்பு உடைந்துவிட்டது, வாழ்க்கையே இருண்டுவிட்டது என்று நடுங்கி, பதறி, வேதனையிலும் வலியிலும் இருக்கிற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் செயல்களாலும் இதம் தருவதற்குப் பதிலாக, ‘வெள்ளைப் புடவை உடுத்திக்கொள், அலங்கரித்துக்கொள்ளாதே, ருசியான சாப்பாடு சாப்பிடாதே, யார் முகத்திலும் விழிக்காதே’ என்றெல்லாம் இருந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன்.