

இந்த வாரமும் நாம் கணவன் - மனைவி உறவைப் பற்றித்தான் சிந்திக்கப்போகிறோம். திருமண உறவில் ஆணும் பெண்ணும் சிலவற்றை விட்டுக்கொடுப்பது புத்திசாலித்தனம். முக்கியமாக ஒரு பெண் தன்னுடைய அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள், சுற்றத்தார் என அனைவரையும் விட்டுவிட்டு வரும்போது அது அவளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெண்ணாக, வெளியுலகம் பற்றிய பார்வை கொண்ட பெண்ணாக இருந்தால் கொஞ்சம் தைரியத்துடன் இருப்பாள். அப்படி இல்லாமல் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட பெண் என்றால், பழகிய உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு புது இடத்துக்கு வரும்போது அவளிடம் நிச்சயமாக பதற்றமும் பயமும் தவிப்பும் இருக்கும். இதையெல்லாம் அவள் புகுந்த வீட்டில் உள்ளோர் நினைவில் வைத்துப் புரிந்துகொள்வது அவசியம்.