

திருமணத்தைப் பற்றிப் பேசுகிறபோது சிலருக்குச் சில கேள்விகள் எழலாம். நீங்கள் திருமணத்தைப் பற்றி இவ்வளவு உயர்வாகச் சொல்கிறீர்கள், திருமணம் செய்யாமல் யாருமே வாழ முடியாதா, திருமணம் அனைவருக்கும் அவசியமா எனக் கேட்டால், நிச்சயமாக இல்லை. யாருக்குப் பசிக்கிறதோ அவர்கள்தான் சாப்பிடுவார்கள். அப்படி அதுபோன்ற உறவு யாருக்குச் சாத்தியமோ, என்னால் இன்னொருவரோடு இந்தப் பந்தத்தை இணைத்துக்கொள்ள முடியும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுரிமைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். மகளிர் தினத்தன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் காரசாரமாகப் பேசினார்கள். “வாழ்க்கையில் ஆண்கள் இல்லாமல் வாழப் பழகுவோம். ஆண்களை வாழ்க்கையில் இருந்து தூக்கியெறிவோம்” என்று ஒரு பெண் பேசினார். அதற்கு நிறைய கைத்தட்டல் கிடைத்தது. என்னுடைய முறை வந்தபோது நான், “எனக்கு முன்னால் பேசியவர் ஆண்கள் இல்லாமல் வாழ்வோம், ஆண்களைத் தூக்கியெறிந்துவிட்டு நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று பேசினார். நீங்கள் கைதட்டினீர்கள்.