

திருமண உறவைப் பற்றித்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதில் இன்னும் சில விஷயங்களை யோசிப்பது நல்லது. பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு முதல் முறை போனபோது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அமெரிக்காவுக்குச் சென்ற பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அல்லது படித்துவிட்டு வெளியேறிய மாணவர்களுடன் பேசியிருக்கிறேன்.
திருமணப் பொறுப்பு: அப்போதே ‘சேர்ந்து வாழ்தல்’ என்று சொல்லக்கூடிய ‘லிவிங் டுகெதர்’ அமெரிக்காவில் சகஜமான விஷயமாக இருந்தது. நன்றாகப் படித்த, மிக உயர்ந்த அறிவோடு வேலையில் இருந்த ஆணையும் பெண்ணையும் சந்தித்தபோது, “ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சேர்ந்து வாழ்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் மிகவும் தெளிவாகப் பதில் கூறினார்கள்: “கல்யாணம் என்று ஒன்றைச் செய்துகொண்டால் அது எங்களுக்குப் பொறுப்பைத் தந்துவிடுகிறது. நாங்கள் எப்போது தாம்பத்யம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோமோ அப்போது எங்களுக்குள் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் வருகிறது. பொறுப்புகளை ஏற்கும்போது எதிர்பார்ப்புகள் வருகின்றன. எதிர்பார்ப்புகள் இருக்கும்போது ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏமாற்றங்கள் உருவாகும்போது அது கோபதாபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.” இதுவொரு வட்டம்போலத்தான் என்று அவர்கள் நம்புகிறார்கள்.