

ராப் பாடல்கள் என்றாலே பெண்களுக்கு எதிராக இழிவான வரிகளைப் பாடக்கூடியவை என்று மக்களின் மனதில் இருக்கும் பிம்பத்தைத் தங்கள் பாடல் மூலமாக மாற்றியமைக்க முயல்கிறார்கள் ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ குழுவினர். அபிஷா, கவிசிக்கி, நேயா, ராகா காற்றலை ஆகிய நால்வரும்தான் ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ இசைக் குழுவின் முகங்கள். தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் குழு எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர்களது பாடல்கள் போராட்டக் களங்களிலும் மக்கள் அரங்குகளிலும் ஒலிக்கின்றன.
2023, டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தக் குழுவில் இவர்கள் ஒவ்வொருவரும் இணைந்தது சுவாரசியமான கதை. “நான் திருச்சியிலிருந்து வந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் ஆவணப்படத் தயாரிப்பாளராக வேலை பார்த்தேன். 2021இல் ஆர்.ஏ. புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதை ஆவணப்படுத்தியபோது எளிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவது கோபமூட்டியது.