

தன்னைப் போலவே பிறரையும் நேசித்ததால் சிறந்த தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த பிரியதர்ஷினி. இவருடைய பெற்றோருக்கு மகளை மருத்துவராகப் பார்க்க வேண்டுமென்பது விருப்பம். ஆனால், பட்டுநெசவுக்குப் பெயர்பெற்ற தொட்டம்பாளையம் கிராமத்தில் வளர்ந்த பிரியாவுக்கோ, ஜவுளித் துறையின் மீதுதான் விருப்பம். அதனால், ஜவுளித் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார்.
முதுகலை முடித்த கையோடு திருமணம். பிரியாவின் கணவர் சந்தானகிருஷ்ணன் விளம்பரப் பட இயக்குநராக இருந்ததால் சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். பிரியாவும் தான் படித்த துறை சார்ந்து மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார். பிரியா கருவுற்றபோது சென்னையில் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதால் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கோவைக்குத் திரும்பினர். அப்போது குழந்தைப் பேறு தொடர்பாக கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரியா, இயற்கையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.