

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று நம் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் வள்ளுவன் சொல்லிச் சென்று பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றைக்கும் ஒரு நபரைக் குறிப்பிடவோ அடையாளப்படுத்தவோ சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்களோடு அவர் எத்தகைய உருவம் கொண்டவர் என்பதையும் அனிச்சைச் செயலாகவே செய்துகொண்டிருக்கிறோம்.
நம் அன்றாட வாழ்க்கையில் இருப்பதையே திரைப்படங்களும் காலம் காலமாகச் செய்துவருகின்றன. அதிலும் ஒருவரை உருவக் கேலிக்கு உட்படுத்தும் வழக்கத்தை நகைச்சுவையின் பேரில் செய்வது அறிவீனம். எலும்பும் தோலுமாக உடல் மெலிந்தவர், அளவு மீறிய உடல் பருமன், சராசரி உயரத்துக்கும் கீழாக மிகமிக உயரம் குறைந்தவர், முகத்திலேயே கண்களோ, மூக்கோ, காதோ அளவில் பெரிதாகத் தனித்த அடையாளத்துடன் இருந்தாலும் குற்றம்.