

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெண் பிறவி என்பது பேசுபொருளாகவே பேசியும் பேசாமலும் இருந்து வருகிறது. பெண் என்பவள் ஆயிரம் வலிகளின் பெருநதியைக் கடந்து தனது வாழ்க்கையை எப்படி எல்லாம் கடத்த வேண்டியிருக்கிறது என்பதை உலகம் அறியும். பெண்ணைத் தாயாக, தமக்கையாக, மகளாக, இறைவியாக இப்படிப் பல்வேறு நிலைகளில் கொண்டாடும் அதேநேரம் அவளை ஒரு போகப்பொருளாகக் கருதும் போக்கும் நிலவுகிறது. அவளது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக ஆக்கப்படுவதும் உலகின் வாடிக்கையாக இருக்கிறது.
பிறப்பு முதல் இறப்புவரையில் பெண் என்பவள் தன்னுடைய எண்ணம், செயல், உணர்வுகள் ஆகிய எல்லாவற்றையும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவே அர்ப்பணிக்கிறாள் என்பதே யதார்த்தம். ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் எனப் பல்வேறு கூறுகளைப் பெண்ணின் மீது மட்டுமே சுமத்தும் அவலத்தின் வெளிப்பாடு இது.