

நவீனத் தனியுடைமைச் சமூகம் தோன்றிய காலந்தொட்டுப் பெண் அடிமையாக்கப்பட்டாள். அன்று முதல் இன்றுவரை பெண் சமூகத்தின், குடும்பத்தின் சொத்துகளை உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து வருகிறாள். குடும்பம் என்கிற சமூக அலகு, பெண்ணின் அனைத்து வகை உழைப்புக்கும் மரியாதையும் பொருளாதார மதிப்பும் அளிக்க வேண்டும் என்பது இங்கே சட்டமாகவில்லை. குடும்பத்தினுள் பெண்களின் இருப்பு பிறர் அறியத் தகாதது என்று ஆணாதிக்கச் சமூகம் கருதுவதால், அது பொதுவெளியில் பேசப்படுவதில்லை.
குடும்பத்தினுள் எல்லா உரிமைகளுடனும் உலாவரும் ஆண், திருமணம் என்கிற ஒப்பந்தத்தின் மூலம் தன்னுடன் பிணைக்கப்பட்ட பெண்ணின் உடல், உடைமைகள், மகிழ்ச்சி, நிம்மதி ஆகிய அனைத்துக்கும் அதிபதி ஆகிவிடுகிறான். 21ஆம் நூற்றாண்டில் கால் பகுதி கடந்துவிட்ட நிலையில், நம் சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன?
குடும்பத்தினுள் பெண்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டம், ஆண்களுக்குப் பணியவும், உடல் - உளவியல் - பாலியல் வன்முறைகளை எதிர்ப்பின்றி ஏற்கவும், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யவும், உறவினர்களால் ஏவப்படும் பாலியல் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ளவும், திருமணம் - குடும்பம் - குழந்தைகளை ஆளாக்குவது ஆகியவை தனது கடமை என்று ஏற்கவும் பெண்களின் உளவியலைக் கட்டமைக்கிறது.