

கரோனா காலக்கட்டத்தில் ஒரு பெண் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நின்றபடி தோசை சுடும் படம், ‘ஒரு தாயின் நிபந்தனையற்ற அன்பு எப்போதும் ஓய்வு எடுக்காது’ என்கிற குறிப்புடன் வைரலானது. அதைப் பார்த்தபோது நான் மட்டுமல்ல, என்னைப்போல பலர் கொதித்தெழுந்து, ‘இது தாய்மையே அல்ல; அன்பின் பெயரால் ஒரு பெண்ணை இறக்கும்வரை சுரண்டுதல்’ என்று வாதிட்டோம்.
நிஜத்தில் இப்படியான ஒரு சூழலை அண்மையில் எதிர்கொண்டபோது, அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. குழந்தை பெறுவதைத் தவிர மற்ற அனைத்தையும் ஆண்கள் செய்யலாம் என்கிறபோதும் சில வேலைகளும் பொறுப்புகளும் பெண்களுக்கானவை என்பது இன்றளவும் எழுதப்படாத சட்டமாக இருப்பது எதனால்? பல குடும்பங்களில் சமையலறை, வீட்டுப் பொறுப்புகள், குடும்பம் போன்றவற்றிலிருந்து பெண்கள் முழுமையாகத் தங்களை விடுவித்துக்கொள்வதற்கு எதிரான மனநிலை மாறியிருக்கிறபோதும் அவர்களால் ஏன் இதிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியவில்லை?