

ஆணாதிக்கச் சமூகத்தில் அடிமையாக அடக்குமுறைக்கு உட்பட்டு வாழ்ந்த முந்தையதலைமுறைப் பெண்கள், பெண்ணி யத்தின் ஆணிவேர்களான சட்டப் பாதுகாப்பு, பொருளாதார விடுதலை, பாலியல் சமத்துவம், சம கல்வி, சம வேலை வாய்ப்பு, அரசியலில் சமத்துவம், முடிவெடுப்பதில் சுதந்திரம் ஆகியவற்றுக்கெல்லாம் போராடினர்; இன்றும் போராடிவருகின்றனர். சென்ற தலைமுறை அனுபவித்த அடக்குமுறைகளை இன்றைய இளம் பெண்கள் அனுபவிக்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு, இல்லத்திலும் சமூகவெளியிலும்ஓரளவு சுதந்திரம் என்கிற அளவில் அவர்களது வாழ்க்கை முன்னேறி உள்ளது.
சுயத்தை மீட்டெடுத்தல்: இன்றைய நவீன யுகப் பெண்கள் தனித்துவம் உடையவர்களாக, சுய சிந்தனையும் சுய முன்னெடுப்பும் உடையவர்களாக உருவாவதை மட்டுமே பெண்ணியம் என்று நம்புகின்றனர். அந்த அடிப்படையில் அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையைத் தகவமைத்துக் கொள் கின்றனர். தனக்கானஆடைகளைத் தன் விருப்பத்துக்கும் சௌகரியத்துக்கும் ஏற்பத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுதல், தனக்குப் பிடித்த, தன்னுடைய எண்ண அலைகளுக்கு ஒத்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், அவர்கள் ஒத்து வராதபோது அவர்களை விட்டுத் தயக்கமின்றி விலகுதல், தனித்து வாழ்தல், விருப்பப்பட்டால் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் என்று தன்னை முன்னிறுத்தும் உலகை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.