

ஒரு பெண்ணுக்கு ஆயிரம் ஆயிரம் சவால்கள் வாழ்க்கையில் வரலாம். அவை அனைத்தையுமே அவளால் சமாளிக்க முடியும் அல்லது சகித்துக்கொண்டு வாழ்ந்துவிட முடியும். ஒருவேளை பெண்களது தனிப்பட்ட விருப்பங்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டால், அதன் வலி ஆயுசுக்கும் அவர்களை விட்டுப் போகாது. பல பெண்கள் அது குறித்துப் பேசுவதே இல்லை. அதற்கு முக்கியக் காரணம் அதைப் பற்றியெல்லாம் பேசக்கூட அவர்களில் பலருக்குத் திராணி இருப்பதில்லை.
ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள். புத்தகம் என்பதுகூட ஆண் சார்ந்த ஒரு விஷயமாகத்தான் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. ஓர் ஆணுக்குப் புத்தகம் வாசிக்கக்கூடிய ஆடம்பரம் வெகு எளிதில் கிடைக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு அது கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு.
எனவே, அந்த அரிதான வாய்ப்பை அவர்கள் மெல்ல மெல்லக் கைவிட்டு விடுகிறார்கள். ஒருகட்டத்தில் திருமணம் ஆன பிறகு முற்றிலுமாக அவர்கள் வாசிப்புப் பழக்கத்திலிருந்து தங்களை விடுதலை செய்துகொள்கிறார்கள் அது உண்மையான விடுதலை அல்ல. விடுதலை ஒரு பெண்ணைச் சிறை வைக்குமா என்று கேட்டால், ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். வாசிப்பின் வாசத்திலிருந்து விடுதலை அடைந்த பெண் சிறைபட்ட ஒரு வாழ்க்கையைத்தான் மனரீதியாக - அறிவுரீதியாக வாழத் தொடங்குகிறாள்.