

மனித மனம் மிகவும் விசித்திரமாகச் செயல்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அன்றாட உணவுக்கே போராடும் மனிதர்களிலிருந்து எவ்வளவு பணம் படைத்தவர்களாயினும் அவரவருக்கான சவால்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையேயும் மனிதன் தன்னையும் தன் சவால்களையும் பின்னிறுத்திவிட்டு மற்றவர் வாழ்க்கையை அலசுவதற்கும், மற்றவர் வாழ்க்கையின் மீதான தன் கருத்துகளை நிலைநிறுத்துவதற்கும், அவர்கள் மேல் தன் வன்மங்களைக் கொட்டுவதற்கும் எப்பொழுதும் தயார் நிலையிலேயே இருப்பது விசித்திரம்தானே!
மற்றவர் வாழ்க்கை நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று உணர்ந்தும் ஏன் எப்பொழுதும் மற்றவர் மேல் - அது தன் உறவினராக இருக்கலாம், பக்கத்து வீட்டு மனிதராக இருக்கலாம் அல்லது நமக்கு எந்த விதத்திலேயும் தொடர்பே இல்லாத ஆனால் தொழில் முறையினால் (நடிகர், எழுத்தாளர் போன்ற) பிரபலமானவர்களாக இருக்கலாம் - கல்லை எறிய தயார் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயமே.