

பெருந்தொற்றுக் காலத்துக்கு முன் ஒரு பெண் எங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவ வந்து கொண்டிருந்தார். எங்கள் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் அவர்தான் பணி செய்துகொண்டிருந்தார். அன்பும் நேர்மையும் கொண்டவர். அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக வளையவருபவர். எனவே, எல்லாருக்கும் அவரது சேவை இன்றியமையாத ஒன்றாக இருந்தது. அவர் வசிக்கும் இடத்தில் இருந்து எங்கள் பகுதிக்குப் பேருந்தில்தான் வந்தாக வேண்டும் என்பதால் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது அவரால் பணிக்கு வர இயலவில்லை.
திடீரென ஒருநாள் வீட்டு வாசலில் அவர் குரல் கேட்டது. பதற்றத்தோடு கதவைத் திறந்து பார்த்தேன். “உங்கூட்டுக்கும் வேலை செஞ்சுட்டுப் போயிரவா” என்றார். “நான்தான் சம்பளத்த உங்க பையனுக்கு அனுப்பிடறேன்னு சொன்னேனே, இந்தச் சூழலில் எதுக்குக் கிளம்பி வந்தீங்க, எப்படி வந்தீங்க?” என்று விசாரித்தேன். ஒரு வீட்டு அடையாளம் சொல்லி, அந்த வீட்டுப் பெண்மணி இருசக்கர வாகனத்தில் கிளம்பித் தன் வீட்டிற்கே வந்து தன்னைக் கூட்டி வந்ததாகச் சொன்னார். வந்தது வந்துவிட்டோம், எல்லா வீட்டு வேலையையும் முடித்துவிடுவோமே என்று தெருவுக்குள் சுற்றிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். “நாங்களே வேலையெல்லாம் முடிச்சுட்டோம். கவர்ன்மென்ட்டா பார்த்து லாக்டவுன் எடுக்கற வரைக்கும் இப்படில்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க. இனிமேல் இப்படி யார் கூப்பிட்டாலும் கிளம்பி வராதீங்க” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.