

“எனக்குச் சுத்தமா பிடிக்கல. நீங்க உங்க போட்டோ, வீடியோன்னு ரீல்ஸ் போட்டு சோஷியல் மீடியால பாட்டை ஓட விடறதப் பார்க்கக் கோவமா வருது” என்றான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எளிமையாகச் சமைத்துத் தருவது, முகம் வாடி இருந்தால் காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்ய முனைவது, ஒரே நாளில் பத்து முறை கூட எந்த எதிர்ப்புமில்லாமல் கடைக்குச் செல்வது எனப் பலரும் பாராட்டும் நல்ல பிள்ளைதான் அவன்.
ஒளிப்படங்களை எடுக்கச் சொல்வது, வீடியோவை தொகுத்த பின் பாட்டை இணைக்கச் சொல்வது என அவ்வப்போது வேலை ஏவுவதால் இப்படிச் சொல்கிறானோ எனச் சந்தேகம். அதற்குக் காரண மில்லாமலும் இல்லை. “அந்த இடத்தில் போட்டோ எடுக்க வேண்டாம், இந்த நேரத்தில் எடுக்கக் கூடாது”என இப்போதெல்லாம் அவன் அதிகம் சொல்வதும் நினைவுக்கு வருகிறது.