

செவ்விந்தியக் குழந்தைகளை அமெரிக்கக் காலனியாதிக்கத்துக்கு மாற்றும் பொருட்டு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலம்வரை அமெரிக்காவிலும் கனடாவிலும் பல அமெரிக்க இந்திய உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டுவந்தன. அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் இருந்த ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒன்பது குழந்தைகள் தற்போது தாயாக, பாட்டியாக, கொள்ளுப் பாட்டியாக ஆகிவிட்டார்கள்.
ஆனால், மிகச் சிறிய வயதில் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளில் இருந்து அவர்களால் மீளவே முடியவில்லை. காலம் பல கடந்த பிறகும் தங்களை உறங்க விடாமல் செய்கிற அந்த வாதையை வெல்ல அவர்கள் முடிவெடுத்தனர். குற்றவாளிகளை அம்பலப்படுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் ஓரளவுக்கு மன நிம்மதி கிடைக்கும் என்பதால், அவர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்தாண்டுகளைக் கடந்த அந்தச் சட்டப் போராட்டத்தை மையமாக வைத்து ‘நைன் லிட்டில் இண்டியன்ஸ்’ என்கிற ஆவணப் படத்தை ஷானான் கிரிங் இயக்கியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த ஆவணப் படத்தில் தோன்றுகின்றனர். “என்னைப் போலவே நீங்களும் சிறு வயதில் பாதிரியார்களாலும் அருட்சகோதரிகளாலும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப் பட்டீர்களா என்று என் அம்மா தன் சகோதரிகளிடம் கேட்டார். அந்தக் கேள்விக்குப் பிறகே பண்டோரா பெட்டியில் இருந்து அவ்வளவு உண்மைகள் வெளியேறின.
என் அம்மா பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்” என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் மகள் அந்த ஆவணப் படத்தில் சொல்லி யிருக்கிறார். இந்த ஆவணப் படம் நியூயார்க்கில் உள்ள லிங்கன் மையத்தில் மே 27 அன்று திரையிடப்படுகிறது. இதைத் தயாரித்து இருப்பவர் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.