

சமூக வலைத்தளங்களில் பெரும் பகுதி பெண்களின் பங்கேற்பால் ஆனது. அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், உளவியல், மாதவிடாய், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, எடை குறைப்பு, சரிவிகித உணவு, பொது மருத்துவம், கல்வி, சேமிப்பு எனத் துறை சார்ந்து தம் கருத்துகளைப் பொதுவெளிக்கு வைப்பவர்கள். நூல்கள், வாசிப்பு, ரசனை, இசை, நடனம் எனக் கலை ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள். துறைசார் வல்லுநர்கள், மருத்துவர்கள் மட்டுமன்றித் தாம் அறிந்ததையும் அனுபவத்தில் பெற்றதையும் அளவற்ற வகையில் காணத் தருபவர்கள் என இணையமெங்கும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள்.
நகைச்சுவை என்கிற பெயரில் குடும்பத்துடன் பதிவு செய்கிறார்கள் பெண்கள். தாம் செய்கிற யாவற்றையும் ‘Vlog’ எனும் பதிவுகளாக்கித் தனிப்பட்டவற்றையும் பொதுவாக்குகிறார்கள் சில பெண்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளையும் இந்த மோகத்திற்குப் பலியிடுகிறார்கள். விளம்பரங்களுக்காக, அதில் வரும் வருமானத்துக்காக எல்லாவற்றையும் நமக்குப் பரிந்துரைக்கிறார்கள் சில பெண்கள்.