

வெற்றிக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் விளையாட்டு களில் பங்கு பெறுபவர்களுக்கு மத்தியில் ‘டிரெய்ல் ரன்னிங்’ எனப்படும் இயற்கைப் பாதை ஓட்டத்தைத் தன் மனதுக்கான விளையாட்டு என்கிறார் கோவையைச் சேர்ந்த மாரத்தான் வீராங்கனை நெளஷீன் பானுசாந்த். இதில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பெண் வீராங்கனையான இவருக்குத் தமிழக அரசு சார்பில் துணிவு, சாகசச் செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பிறந்து, கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் பள்ளிக் கல்வியை முடித்து, கோவையில் பொறியியல், உளவியல் பயின்றவர் நெளஷீன் பானுசாந்த். இவர் உலகிலேயே கடினமான மாரத்தான் போட்டியாகக் கருதப்படும் ‘டிரெய்ல் ரன்னிங்’ போட்டியில் ஆர்வம் கொண்டவர். மைனஸ் 10 டிகிரி குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை, கரடுமுரடான பாதைகள் கொண்ட இமயமலைப் பகுதியில் 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் ‘டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்’ போட்டியை மூன்று முறை நிறைவு செய்துள்ளார்.
“விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தாலும் அப்பா சாந்த் ஷெரீப் தந்த ஊக்கத்தாலும் ஆறு வயதில் டி.என்.பாளையத்தில் உள்ள மலைக்கோயில் படிக்கட்டுகளில் ஓடிப் பழகினேன். அந்த அடிப்படை மூச்சுப் பயிற்சி இமயமலையில் 42 கி.மீ மாரத்தான் ஓடுவதற்குத் துணைபுரிந்தது.
விளையாட்டுப் பயிற்சிக்காக அதிக நேரம் பள்ளி மைதானத்தில்தான் இருப்பேன். என்றாலும் பள்ளியிலும் கல்லூரியிலும் முதல் மூன்று இடங்களில் வந்துவிடுவேன். கரோனாவுக்குப் பிறகு நானும் என் அண்ணனும் மனதளவில் அதிகப் பிரச்சினைகளை எதிர்கொண்டோம். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவைக்குக் குடிபெயர்ந்தோம்” என்று சொல்லும் நௌஷீன், கோவையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார்.