

நான் எல்.ஐ.சி. அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். என் சிறுவயதில் எங்கள் வீட்டில் இட்லி வியாபாரம் செய்து வந்தார்கள். அப்போது மாவு அரைக்க ஆட்டுக்கல்தான். மாவரைக்க அம்மாவுக்கு உதவ ஆரம்பித்து, பின்பு அதுவே என் வேலையாக மாறிவிட்டது.
நான் கல்லூரியில் சேர்ந்தபோது மாவரைத்தலில் ‘எக்ஸ்பர்ட்’ ஆகிவிட்டேன். எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு உளுந்து என்று கற்றுக் கொண்டேன். அரிசியைக் கொஞ்சம் கொரகொரப்பாகவும் உளுந்தை நன்றாகவும் அரைத்து அதற்கேற்ப உப்பு சேர்த்துக் கலக்கிவைக்கும் அளவுக்கு முன்னேறினேன். மறுநாள் காலை சுடச்சுட இட்லி ஊற்றி எடுக்கவும், அதற்கேற்றபடி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைக்கும் திறனையும் பெற்றேன்.