

நானும் என் மனைவியும் வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக வசித்துவருகிறோம். நான் தனியாக இருப்பதால் சமையல் கற்றுக்கொள்ளும் சூழல் உருவானது. ஆரம்பத்தில் சோறு மட்டும் வடித்துவிட்டு, என் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் உணவகத்தில் சாம்பாரும் கூட்டும் வாங்கிக்கொள்வேன். கரோனாவுக்குப் பிறகு அந்த உணவகத்தையும் மூடிவிட்டார்கள். எனவே வேறுவழியின்றி முழுதாகச் சமைக்கத் தொடங்கினேன்.
நான் அலுவலகத்திற்குச் செல்லும் நேரம் கருதி பெரும்பாலும் காலை நேரத்தில் தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என ஏதாவது ஒரு கலவை சாதம்தான். இரவில் சப்பாத்தி அல்லது இட்லி. அவற்றுக்குக் குருமா, சாம்பார் வைப்பேன். அலுவலகத்தில் மதிய உணவின்போது அலுவலக சகாக்களுடன் சாப்பிடும்போது, எல்லாரும் குறிப்பாகப் பெண்கள் எனது சமையலைச் சிலாகித்துப் பேசுவார்கள். என்னிடம் சில சமையல் குறிப்புகளையும் கேட்டுக்கொள்வார்கள். நான் உணவகம் திறக்கலாம் என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு. என் சமையலின் ருசிக்குக் கிடைத்த அங்கீகாரம் அது.