

தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட நான் வாழ்க்கையில் சமையலைக் கற்றுக்கொள்ளவே கூடாது என்று சபதமே எடுத்தேன். என் தாத்தாவுக்குச் சமையல் தெரியும் என்பதால் பாட்டியுடன் பெரிய அளவில் சண்டை வந்துவிட்டால் தனியாகச் சமைத்துச் சாப்பிடுவார். அவருக்குச் சமைக்கத் தெரியாமல் இருந்திருந்தால் சண்டைகள் தவிர்க்கப்பட்டுவிடுமே என்று நினைப்பேன். காலம் விசித்திரமானது. நாம் நினைப்பதற்கு எதிரான பாதையில் நம்மை இழுத்துச் செல்லும். முதுமை காரணமாக வீட்டு வேலை செய்யவே பாட்டி மிகவும் சிரமப்பட, எனது துணிகளைத் துவைப்பது, பாத்திரம் கழுவி வைப்பது போன்ற சிறு சிறு வேலைகளைச் செய்தேன்.
ஒருகட்டத்தில் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். வீட்டுவேலைகளையும் பார்த்துக்கொண்டு சமையலை முடித்துவிட்டு வேலைக்கும் செல்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதைக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அனுபவித்து உணர்ந்தேன். இந்தக் கொடுமையைத்தானே ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் அனுபவித்துவருகிறார்கள்.