

தென்கொரியாவுக்குக் குடும்பத்துடன் வந்திறங்கி ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆய்வாளரும் பேராசிரியருமான நான், நேரம் கடந்தும் பணியிடத்திலேயே இருக்கவேண்டிய நிலை காரணமாக எந்தவோர் உதவியையும் இந்தியாவில் இருந்தபோது செய்ய முடியவில்லை. பெரியாரியவாதியான எனக்கு அது மிகவும் அவமானமாகவே தோன்றியது. சமையலறைக்குப் பூட்டு போடும் மாற்றத்தை வீட்டிலேயே தொடங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது.
சமையலுக்கென ஆளைப் பணியமர்த்தலாம் என்பது மனைவிக்கு ஒவ்வாமையாகவே இருந்ததால், காலம் அப்படியே கடந்துபோய்விட்டது. வெளி உணவின் மீதான நம்பகத்தன்மையற்ற நிலை, வீட்டுச் சமையலறைக்குப் பாரமாக இருந்தது. என்னால் அதிகபட்சமாகப் பாத்திரம் கழுவிக் கொடுக்கமுடிந்தது, அதுவும் சில நாள்களுக்கு மட்டும்.
தென்கொரியாவில் வேலை அழுத்தமோ இரவுவரை பணியிடத்தில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. ஓய்வு நேரம் அதிகமாகவே கிடைத்ததால் சமையலறை வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பூட்டுப் போடும் திருவிழாவை இங்கே நிகழ்த்தலாமே என்கிற எண்ணத்தில் கொரிய உணவை உண்பது என்கிற முடிவுக்கு வந்தோம். கொரியர்கள் பெரும்பாலும் அப்படித்தான்.