

பருப்பு, கிழங்கு, அரிசி என்று இரண்டு தனித்தனி குக்கர்களில் கேஸ் ஸ்டவ்வில் வைத்துவிட்டு வாஷிங் மிஷினில் துணிகளைப் போடச் சென்றேன். கூடையில் இருந்து துணிகளை எடுத்துப் பிரித்துக்கொண்டிருந்தபோது அடுத்தடுத்த மூன்று விசில் சத்தங்கள் வந்தன. மீண்டும் சமையல் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். எந்த குக்கரில் எத்தனை விசில் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு குக்கரும் ஒவ்வொரு மாதிரி விசில் அடிப்பதுபோல் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே என்று புலம்பினேன். அது என் இல்லத்தரசிக்குக் கேட்டுவிட்டது.
அவர் அரசுப் பள்ளி ஆசிரியை; வேறு அறையில் அமர்ந்து விடைத்தாள் திருத்திக்கொண்டு இருந்தார். புலம்பலைக் கேட்டவுடன், “சின்ன குக்கரில் ரெண்டு விசிலும் பெரிய குக்கரில் ஒரு விசிலும் வந்தது” என்று பதில் வந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டதுபோல், “நல்லா கவனிச்சா ரெண்டு விசிலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தெரியும். அதுக்கெல்லாம் அனுபவம் வேணும்” என்று கிடைத்த வாய்ப்பில் அடித்து ஆடினார். அவர் சொன்னது உண்மைதான்.