

பல மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் ஒரு திரைப்படத்துக்குச் சென்றிருந்தோம். இளைஞர்களின் ‘மாஸ் ஹீரோ’ எனக் கொண்டாடப்படும் நடிகரின் படம் அது. கதையில் அந்த நாயகன், தான் காதலிப்பதாகக் கூறும் பெண்ணைத் துடிக்கத்துடிக்கக் கண்ணாடிக் குவளையால் அறுத்துக் கொடூரமாகக் கொல்லும் காட்சியைப் பார்த்ததும் பதறினேன். மேலும், குழந்தைகளை மோசமாகச் சித்திரவதைப்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பானபோது திரையரங்கில் இருந்த குழந்தைகள் கதறி அழுதனர். காண்போரின் மனதை உலுக்கும் வன்முறைக் காட்சிகள்தான் பணம் சம்பாதிப்பதற்கான வழியா?
இதைப் போலவே வசூலில் சாதனை படைத்த இன்னொரு படத்தில் நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை கொல்லப்படுவதாகப் படமாக்கப்பட்டிருந்தது. கருவுறத் தகுதியான பெண்களை, குறிப்பாகப் பருவமெய்திய இளம்பெண்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யும் காட்சிகளும் அந்தப் படத்தில் இருந்தன. படத்தின் பிற்பகுதி நேர்மறையான காட்சிகளோடு அமைக்கப்பட்டிருந்தாலும் முற்பாதி காட்சிகளின் தாக்கம் பல மாதங்களாகியும் என் மனதைவிட்டு நீங்கவில்லை.