மகுடம் சூட்டிய மசாலா தொழில் | முகங்கள்

மகுடம் சூட்டிய மசாலா தொழில் | முகங்கள்
Updated on: 
2 min read

தொழிலில் உங்கள் முதலீடு என்ன என்று கேட்டால் கடின உழைப்பு, தரம், நேர்மை, தொடர்ந்து பொருள்களைத் தயாரித்து வழங்கிக்கொண்டே இருப்பது என்கிறார் ஷ்யாம்லி. இவர், ‘எஸ்ஹெச்டி (ஷ்யாம்ஸ் ஹோம் டிலைட்) மசாலா’ என்கிற பெயரில் பல்வேறு மசாலாப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

ஓசூரில் மசாலாத் தொழில் செய்துவரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு ஷ்யாம்லியை முன்னு தாரணம் என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், கிடா விருந்து மட்டன் சுக்கா, திண்டுக்கல் பிரியாணி மசாலா, குழம்பு மசாலா, சாம்பார் மசாலா, கல்யாண சாம்பார் மசாலா எனப் பல வகை மசாலாப் பொருள்களைத் தயாரிக்கிறார்.

“பிரண்டைப் பொடி, பிரண்டைத் தொக்கு, பிரண்டைத் தைலம் மூணும் எங்கள் ஸ்பெஷல். மூட்டு வலிக்கு இவை நல்ல பலன் கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் பாராட்டும்போது, அதை எங்கள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகவும் அங்கீகாரமாகவும் பார்க்கிறேன்” என்கிறார் ஷ்யாம்லி. இணையம் மூலம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளில் இருந்தும் மசாலாப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும் என்கிறார்.

தரத்தில் கவனம்: ஷ்யாம்லிக்குச் சமையலில் ஆர்வம் அதிகம் என்பதாலும் இவர் தயாரிக்கும் மசாலாக்கள் நன்றாக இருப்பதாக மற்றவர்கள் கூறியதாலும் அதைத் தொழிலாக மாற்றியிருக்கிறார். குடும்பத்தின் ஒத்துழைப்பும் இவருக்குக் கைகொடுக்கிறது. “சந்தையில் நிறைய மசாலா பிராண்ட்கள் இருந்தாலும், தரமான வீட்டுமுறை தயாரிப்பு என்பதுதான் எங்கள் அடையாளம்.

மூலப்பொருள்களின் தரத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. ஆன்லைன் மூலம்தான் விற்பனையைத் தொடங் கினோம். வாடிக்கையாளர்கள் பெருகியதால் தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறோம்” என்று கூறும் ஷ்யாம்லி, ஒரு தொழிலில் கிடைக்கும் லாபத்தை மீண்டும் அதிலேயே முதலீடு செய்யும்போதுதான் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியும் என்கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in