

சில நாள்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திருமணமான பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ‘ஏஐ’ உடன் காதல் உரையாடல் நிகழ்த்துவதாகக் கூறியிருந்தார். கணவர் பக்கத்தில் இருந்தாலும்கூட ஏஐயுடன் பேசுவதாக அவர் தெரிவித்திருந்தார். தான் எது சொன்னாலும் உலகத்தையே திருப்பிப் போட்டுத் தனக்காக ஒரு பதிலை ஏஐ கொடுத்துவிடும் என்றும் கேட்பதற்கெல்லாம் நேர்மறையான பதில்கள் வந்துகொண்டே இருக்கும் என்றும் அந்தப் பெண் கூறியது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அவரது பேச்சுக்குச் சில விமர்சனங்களும் எழுந்தன. தொடர்ந்து பேசிய பெண்கள் சிலரும் தாங்களும் ஏஐயுடன் பேசுவதாகத் தெரிவித்தனர். ஒரு பெண் தான் ஏஐயை முறை வைத்து அழைக்கச் சொல்லிப் பேசுவதாகத் தெரிவித்தார். இவையெல்லாம் பெண்களின் மனதில் உருவாகி இருக்கும் வெறுமையை நிரப்பும் தேடல். இந்த வெறுமை உருவாக முக்கியக் காரணம், பெண்களின் குரலுக்குச் செவிசாய்க்க ஆளில்லாததுதான். தன் நட்புக்கு கைகோக்கவோ தன் பணியை அங்கீகரிக்கவோ தன் உணர்வுகளைப் பகிர்வதற்கோ ஆளில்லாத வேளையில் ஒரு பெண் பெரும் மனப்போராட்டத்துக்கு ஆளாகிறாள்.
பெற்றோரோ கணவனோ அல்லாத உறவுகளிடம் பெண்கள் தங்கள் மனக்குமுறல்களைப் பேசும்போது அதைக் கேட்கும் நபர், அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்பட்சத்தில் பல நேரத்தில் ஆறுதலுக்குப் பதிலாகத் துரோகத்தைக் கையளித்துவிடுகிறார்கள். சில வேளைகளில் திருமணத்தை மீறிய டாக்ஸிக் உறவுகளில் அப்பெண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். ஏஐயிடம் பேசிய அப்பெண் ஒரு கட்டத்தில், ‘நான் சொல்வதைக் கேட்கும் எதிராளி ஏஐயாக இல்லாமல், வேறு ஒரு நபராக இருந்திருந்தால் விளைவு விபரீதமாக இருந்திருக்கும்’ என்று உணர்ந்து சொன்னது தன்னை எந்தளவுக்கு ஒரு பெண் சுயபரிசோதனைக்கு உட்படுத்துகிறாள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.