

நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கி இறக்கும் வரையிலும் சட்டம் நம்முடன் வாழ்கிறது; அல்லது நாம் சட்டத்துடன் வாழ்கிறோம். ஆனால், நம்மை ஆளும் இந்தச் சட்டம் எப்படிப் பிறக்கிறது? அது மக்கள் வாழ்வில் என்ன பணியைச் செய்கிறது? அந்தச் சட்டத்துக்கு ஒரு முடிவு உண்டா? இவற்றையெல்லாம் ஏன் தெரிந்துகொள்ள முயலவில்லை என்று தன்னையே கேட்டுக்கொண்டார் தமிழரசி.
சட்டமன்றத்தில் ஒரு சட்டம் குறித்துப் பேசுவதற்கு முன், அந்தச் சட்டம் எப்படி இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதைக் கூடி விவாதித்துவிட்டுப் பேசுவது சிறப்பாக இருக்கும் என்று முடிவெடுத்தார். ஒரு கலந்துரையாடலுக்காக, எல்லாக் கட்சிகளில் இருந்தும் வெற்றிபெற்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்தார்.