

கடந்த மாதம் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் கீர்த்தனாவின் பெயரும் ஒன்று. சாதிப்பதற்கு வறுமை மட்டுமல்ல; குடும்பப் பின்னணியும் தடையல்ல என்பதை இவர் நிரூபித்திருக்கிறார். சென்னை புதுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கீர்த்தனா, மாலத்தீவில் நடைபெற்ற 7ஆவது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
கீர்த்தனாவுக்கு 13 வயது ஆனபோது தந்தை இறந்துவிட, அவரது குடும்பத்தை வறுமை சூழந்துகொண்டது. கீர்த்தனாவின் அம்மாதான் வீட்டுவேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றினார். ஒருவரது வருமானம் போதுமானதாக இல்லாததால் கீர்த்தனாவின் அண்ணண் பிரசாந்த் 12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பச் சுமையைத் தன் தாயுடன் பகிர்ந்துகொண்டார். 3ஆம் வகுப்பு படித்தபோது கீர்த்தனாவுக்கு உருவான கேரம் ஆர்வம், 22 வயதில் உலகையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயரவைத்துள்ளது!
மூன்று வயதில் தொடங்கிய பயணம்: “கேரம் விளையாட்டில் என் அப்பாதான் எனக்கு வழிக்காட்டி. அவர்தான் முதன் முதலில் கேரம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அப்பா இறந்த பிறகு 10ஆம் வகுப்புடன் பள்ளியைவிட்டு நின்றுவிட்டேன். கேரம் விளையாட்டுக்கும் முழுக்குப் போட்டுவிட்டு இரும்புப் பட்டறைக்கு வேலைக்குச் சென்றேன். அப்போது சிசிஏ கிளப் பயிற்சியாளர் நித்தியராஜ், என்னை மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கச் சொன்னார். குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு, அதை நான் தவிர்த்தபோது, எனக்கு ஊக்கமளித்து அதற்கான வழிவகை செய்தார்” என்கிறார் கீர்த்தனா.
இங்கிருந்துதான் கீர்த்தனாவின் கேரம் பயணம் தொடங்கியது. அர்ஜுனா விருது வென்ற மரியம் இருதயம், சென்னை கேரம் சங்கப் பயிற்சியாளர் அமுதன் ஆகிய இருவரும் இவருக்கு உறுதுணையாக இருந்ததோடு வெற்றிக்கும் துணைநின்றனர்.