

ஆண்மை இருந்தால் பதில் சொல்லுங்கள் என்று கேட்ட தமிழக அமைச்சர் ஒருவரின் பேச்சு விவாதத்துக்கு உள்ளான வேளையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியத் தலைவர் நேஹா போரா, தன்னுடைய பாலினத்தை ‘நான்-பைனரி’ (Non-Binary) என்று தெரிவித்துள்ள செய்தி கவனம் பெறுகிறது. ஆண் - பெண் - திருநர் சமூகம் என்று பிரித்து அறிய இயலாத தனித்துவமான பாலின அடையாளத்தைக் கோருகிறது நேஹாவின் குரல்.
ஆண் எதிர் பெண் என்கிற உடல்ரீதியான பால் வேறுபாட்டையும் ஆண்மை எதிர் பெண்மை என்கிற சமூகக் கருத்தாக்கத்தையும் கடந்த பாலின அடையாளம் என்பது உணர்வுநிலை சார்ந்த வெளிப்பாடு; ஒருவர் எந்தப் பாலின அடையாளமும் அற்றவராகத் தன்னை ‘நான் பைனரி' என்று அழைக்க விரும்புவது தற்செயலானதல்ல. அவர் எதிர்கொண்ட அடையாளச் சிக்கல்கள், அதிலிருந்து விடுபடும் தேடலை நோக்கி அவரை நகர்த்தியிருப்பதன் குறியீடே.
இணைமுரண்கள்: பொதுவாகவே இணைமுரண்களால் பொருள் கொள்ளும் முறை நம் சமூகத்தில் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று. அகம் x புறம், அறம் x மறம், வன்மை x மென்மை, சூரியன் x சந்திரன், இருள் x ஒளி, நல்லது x கெட்டது, புனிதம் x தீட்டு, மேல் x கீழ் போன்றவற்றைப் போலவே ஆண் x பெண் என்கிற உடலியல் வேறுபாடும், ஆண்மை x பெண்மை என்கிற பண்புருவாக்க வேறுபாடும் உடைமைச் சமூகக் கருத்தியலில் பிறந்தவை.
அச்சம், நாணம், மடன், பயிர்ப்பு, பொறை, சார்பு போன்றவை பெண்ணுக்கும், பெருமை, வீரம், அறிவு, துணிவு, தலைமைத்துவம் போன்றவை ஆணுக்குமான பண்புகளாக வரையறுக்கப்பட்டன. பெண் மையச் சமூகத்தில் வேட்டைக்குத் தலைமையேற்பவளாக, பகிர்ந்தளிப்பவளாக, தகுதியுடையவனைத் தேர்ந்தெடுப் பவளாக, வலிமையும் திறனும் கொண்டு போரில் முன்நிற்பவளாக இருந்தவள், இந்த வரையறைக்குள் பொருந்தியிருக்கவில்லை.