

சமந்தா நாயகியாக நடித்த ‘யசோதா’ திரைப்படம், இளம்பெண்களை வாடகைத் தாயாக்கி, வணிகமாக்குகிற மருத்துவ உலகைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பிரம்மாண்ட அறையில் இளம்பெண்கள் நிறைந்திருப்பார்கள். அவர்கள் வாடகைத் தாயாகக் குழந்தைகளைப் பெற்றுத்தர முன்வந்தவர்கள். இங்கு வந்ததற்கு அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும்.
பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலும் புலனாய்வுக் காட்சிகளும் இந்தப் படத்தில் யதார்த்தத்தைக் கடந்த மிகையான தோற்றத்தைத் தந்தன. இப்போது தொடர்ந்து நடைபெறும் மருத்துவ உலகின் மீறல்களைக் காணும்போது, சமூகத்தின் இரக்கமற்ற முகங்களைத்தான் இந்தப் படம் காட்சிப்படுத்தியிருப்பதாக அச்சம் பிறக்கிறது.
பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி: மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூர் பகுதிகளில், பெண்களிடம் சட்டவிரோதமாகக் கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த வாரத்தில் ஒரு செய்தி வெளியானது. கருமுட்டை எடுக்க, ரூ.25,000 முதல் 35,000 வரை பணம் கொடுத்துவிட்டு, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு பெண்ணிடம் இருந்து மட்டுமே முப்பதுக்கும் மேற்பட்ட முறை கருமுட்டையை எடுத்துள்ளனர்.
வறுமையைக் காரணம் காட்டிச் சுரண்டப்படும், ஏமாற்றப்படும் பெண்ணின் உடலுக்கு இழைக்கப்படுகிற அநீதி இது. தமிழகத்தில் முன்பு இதுபோன்ற மோசடிகள் கண்டறியப்பட்டுப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சூழலில், வெவ்வேறு இடங்களில் இது தொடர்ந்து நடைபெறுவது, நம்மிடம் குழந்தைப்பேறு குறித்த மதிப்பீடுகள் எந்தவிதத்திலும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.