

சீதையாக சாய் பல்லவி நடித்த ‘ராமாயணம்’ திரைப்படம் வெளியாகி, வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான நாள் தொடங்கி இன்றுவரை சாய் பல்லவி மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார்.
சீதாவாக நடிக்கத் தகுதியற்றவர், அவர் சூர்ப்பனகையாக நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதோடு, அவரின் முக அமைப்பு குறித்தும் இழிவான பதிவுகளைப் பார்க்க முடிந்தது. சீதையும் சூர்ப்பனகையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வரையறை எப்படி உருவானது?
‘பொன்னிற மேனியும், தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களும், கோவைப்பழ உதடும், நிலவு போன்ற ஒளியுடைய முகமும், மெல்லிடையும், கருங்கூந்தலும் உடையவள் சீதா’ என்று வால்மீகி ராமாயணமும், ‘நாம் செய்த தவத்தின் பயனாகத் திருமகளே நிலத்தில் வந்து சீதையாகப் பிறந்தாள்’ என்று கம்பராமாயணமும் போற்றும் சீதை என்கிற கதாபாத்திரம் இன்றளவும் நம் கதை மரபில் மறக்க முடியாததாக, கற்பின் வடிவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.