

மோனிஷா - ஹரிப்ரியா
கட்டுப்பாடுகள், வரையறைகள் எனக் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்த முயற்சிக்கும் அத்தனை விஷயங்களும் பெண்களுக்கு மட்டுமேயானதாகச் சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேள்விக்கு உட்படுத்துகிற வகையில் தங்களது ஓவிய, சிற்பப் படைப்புகளை உருவாக்கியிருக்கின்றனர் ஹரிப்ரியா கௌரிசங்கர், மோனிஷா சுப்பிரமணியம். கடந்த செப்டம்பர் 13 – 19இல் சென்னை லலித்கலா அகாடமியில் நடந்த ‘அகம்’ கண்காட்சியில் இவர்களது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மோனிஷா, ஹரிப்ரியா இருவருமே பொறியியல் படித்துவிட்டு, பின்னர் பி.எஃப்.ஏ. எம்.எஃப்.ஏ பயின்றவர்கள். சிறுவயது முதலே ஓவிய ஆசையைக் கொண்டிருந்தவர்கள். இப்படிச் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஐடி நிறுவனமொன்றில் சில ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் ஹரிப்ரியாவுக்கு உண்டு. குழந்தைப்பேற்றுக்குப் பின்னர் வீட்டிலிருந்தவாறே வரைந்து தள்ள, அதைப் பார்த்து கணவர் கௌரிசங்கர்தான் இவரை நுண்கலைக் கல்லூரியில் சேரச் சொல்லியிருக்கிறார். அது, இவரது கனவுகளுக்கு உருவம் தந்திருக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண் முகமற்று இருப்பது, கழிப்பறை கழுவும் ப்ரெஷ் உடன் பெண்ணின் கால் இணைந்திருப்பது என்பது போன்ற எண்ணங்களைத் தாங்கியிருக்கின்றன ஹரிப்ரியாவின் படைப்புகள். ‘Say Yes’ என்றிருக்கும் டிஷ்யூ பேப்பர்களால் ஆன சிற்பம், முகமற்றிருக்கும் பெண் தலையாட்டிக்கொண்டே இருப்பதாக உணர வைக்கிறது. இப்படிப் பல தலைமுறையாகப் பெண்கள் எதிர்கொண்டுவருவனவற்றைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன இவரது படைப்புகள்.