

கண்ணுக்குப் புலப்படும் எதிரிகளை ஓட ஓட விரட்ட முடியும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எப்படி விரட்டுவது? யார் அந்தக் கண்ணுக்கு தெரியாத எதிரிகள்? சொந்த வீட்டிலும் காதல், நட்புகளிலும் இருக்கிறார்கள் இந்த எதிரிகள்.
அப்பனென்றும் கணவனென்றும் அண்ணன், தம்பியென்றும் மாமன், சித்தப்பன், பெரியப்பனென்றும் கூடவே இருக்கிறார்கள். தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளென்றும் இவர்கள் பயணிக்கிறார்கள். காதலனென்று தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டு உடன் வருகிறார்கள். நண்பனென்று நாலு பேரிடம் சொல்லவும் செய்கிறார்கள்.
முன் பின் பழக்கம் இல்லாத ஒருவனால் ஏற்படும் பாதிப்பை ஊருக்குச் சொல்வது போல், பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு ஓடி ஓடி தண்டனை வாங்கிக் கொடுப்பது போல் கூடவே பயணிக்கும் இவர்களின் அத்துமீறலை அவ்வளவு எளிதில் பெண்கள் வெளியே சொல்வதேயில்லை. கரோனா காலக்கட்டத்தில் எத்தனையோ வீடுகளில் சிறுமிகள் கருவுற்றார்கள். எத்தனையோ கருக்கலைப்புகள் நிகழ்ந்தன.
ஊரடங்குக் காலத்தில் வெளியே எங்குமே போயிருக்காத சிறுமிகளின் கருவறையை நிரப்பியது சொந்த வீட்டில் உள்ள ஏதோ ஒரு ஆண்தானே. அவனை எத்தனை பேரால் வெளியில் காட்டிக்கொடுக்க முடிந்தது? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ சில குரல்கள் ஒலித்தனவே தவிர மற்ற அத்தனை துரோகங்களும் சமாளிக்கப்பட்டன. வீட்டோடு முடக்கப்பட்டன.