

ஒரு காலைப் பொழுது. எழுந்திருக்கும் போதே காலில் வலி. காலை ஊன்ற முடியவில்லை. மருந்து, மாத்திரைகள், இயன்முறை மருத்துவம், யோகா, ஒத்தடங்கள், ஓய்வு என எவ்வளவோ முயன்றும் எதுவும் நிரந்தரத் தீர்வளிக்கவில்லை.
40ஆவது வயதில் ஆரம்பித்த கால்வலியும் வேதனையும் என் உடலோடு மனதையும் மோசமடையச் செய்தன. ஆசிரியராக வேலை பார்த்துவந்த நான் ஒரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியைத் தொடங்கியதால் தலைமை ஆசிரியராகவும் தாளாளராகவும் கூடுதல் பணி செய்ய நோரிட்டது.
கால்வலி, மனஉளைச்சல், தூக்கமின்மை காரணமாக என் பணியை ஆர்வத்தோடு தொடர முடியாமல் சோர்ந்திருந்த நேரம். எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. யாரிடமும் மனம்விட்டுப் பேச முடியாதபடி வலி என்னை வாட்டியது.
சுதந்திரமாக எங்கும் போக முடியாமல் எதுவும் செய்ய முடியாமல் மனவேதனை என்னை வதைத்தது. இதற்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் எனகிற நோக்கோடு பல மருத்துவர்களை நோக்கி மீண்டும் படையெடுத்தேன் எலும்பு தேய்ந்துவிட்டதன் காரணமாக மூட்டு மாற்று அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வு என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறிவிட்டார்கள்.
என் கணவர் மற்றும் உறவினார்களின் ஆலோசனை யோடும் உதவியோடும் 53 வயதில் இடது மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். கரோனாவுக்கு அடுத்த வருடம் வலது காலிலும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். அதன் பிறகு என் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது.
அறுவைசிகிச்சை முடிந்த அன்றிலிருந்தே தினமும் காலுக்குப் பயிற்சி, பயிற்சி, பயிற்சிதான். ஆறு மாதக் கடும் பயிற்சி. என் நடையைத் திரும்பப் பெற்றேன். அப்பப்பா... மனத்தெளிவோடு முன்பைவிடக் கூடுதல் வேகத்தோடு தன்னம்பிக்கையோடு வேலை செய்தேன். நிம்மதியான, வலியற்ற உறக்கம்.
இப்போது எனக்கு 59 வயது. மூன்று ஆண்டுகளாக உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மிதிவண்டி பயிற்சியைச் செய்து வருகிறேன். இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் நான் இழந்த வாசிப்பையும் எழுத்தையும் மீண்டும் தொடங்கிவிட்டேன். எது வந்தபோதும் புலம்பாமல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதைத்தான் கால்வலியில் இருந்து விடுபட்டபோது உணர்ந்தேன்.
- அ.கீதா, திருச்சி.