

நவம்பர் 16 அன்று வெளியான மலர்வதியின், ‘ஒழுக்கத்தின் அளவுகோல் ஆடையா?’ கட்டுரை என்னை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது. ஆரணியை அடுத்த வளையாத்தூர் மோட்டூர் எனும் குக்கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு பெண் மன வளர்ச்சி குறைபாட்டுடன் இருந்தாள். இயல்பாக இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தன் நிலை குறித்து எதுவும் உணராத அந்தப் பெண்ணின் பாதுகாப்பு குறித்து அவளுடைய அம்மாவுக்கு எப்போதும் கவலை.
அப்போதெல்லாம் சீட்டித்துணியில் தைக்கப்படும் பாவாடை, சட்டையைத்தான் அணிவோம். அந்தப் பெண் கொஞ்சம் பூசினாற்போல் இருப்பாள். அதனால், ஒரு பருத்தித் துண்டை மடித்து அவள் மார்பின் மீது கச்சைபோல் இறுக்கமாகக் கட்டிவிட்டு அதன் மீது சட்டை அணிவிப்பார் அவளுடைய அம்மா.