

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சபா நாயகர் (Speaker) என்பவர் அவையின் தலைவரும் சட்ட மன்றத்தின் ஒழுங்கு, கண்ணியம், நடைமுறையின் காவலரும் ஆவார். ஜனநாயகக் கட்டமைப்பின் முதன்மைப் பணியாளராகத் திகழும் இவர், இந்திய அரசமைப்பின் சட்டக்கூறு 178இன் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவைநாயகர் இருக்கை என்பது வெறும் அதிகாரத்தின் இருக்கை அன்று; அது நடுநிலைமை, மரபு, ஜனநாயக மாண்புகளின் சிம்மாசனம்.
தமிழ்நாட்டின் தனித்துவ மரபு: தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டைக் கடந்த வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. இந்த அவை சட்டங்களை இயற்றும் அமைப்பாக மட்டுமல்லாமல், மக்களின் மொழியும் உணர்வும் ஆட்சியின் குரலாக ஒலிக்கும் ஜனநாயக மேடையாகவும் விளங்கியுள்ளது. சட்டமன்ற உரையாடல்களும் அவைக் குறிப்புகளும் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, தமிழ் மொழிக்கு அரியாசனம் அமைத்துக் கொடுத்த வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்துக்கு உண்டு.
தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழுக்கும் தமிழினத்துக்கும் உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசு அமைந்தே தீர வேண்டும். நமது எல்லைகளைக் காப்பதும் நமது மொழியைச் சிம்மாசனத்தில் அமர்த்துவதும் வெறும் அரசியலன்று; அது தமிழினத்தின் வாழ்வாதார உரிமை’ என ம.பொ. சிவஞானம் எழுப்பிய தமிழ் முழக்கம், தமிழர்களின் இதயங்களில் பதிந்த வரலாற்றுக் குரல்.
இத்தகைய வரலாற்றையும் மரபையும் தாங்கி நிற்கும் அவையின் கண்ணியம், ஒழுங்கு, உறுப்பினர்களின் உரிமைகள், ஜனநாயகக் குரலைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவரே சபாநாயகர்.