

ஒருவர் பெண் என்பதற்காகவே அவருக்குப் பணி வழங்க மறுப்பது பெண்களின் கௌரவத்துக்கும் கண்ணியத்துக்கும் எதிரான செயல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள குத்தா கிராமத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் பணிபுரிவதற்காக சுமித்ரா என்பவர் 1998இல் பரிந்துரைக்கப்பட்டார். அவருடன் பரிந்துரைக்கப்பட்ட 49 பேரில் 43 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. சுமித்ராவுக்குப் பணி வழங்க ஐ.ஓ.சி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து சுமித்ரா வழக்குத் தொடுத்தார். எரிவாயு நிரப்பும் பணியை வழங்க முடியாது என்றால் அவருக்கு உதவியாளர் பணி வழங்க விசாரணை நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐ.ஓ.சி மேல்முறையீடு செய்தது. சுமித்ராவுக்குப் பணி வழங்கும்படி பரிந்துரைக்கப்பட்டதே தவிர, அவருக்குப் பணி வழங்கியே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தை சுமித்ரா நாடினார். உயர் நீதிமன்றமும் முந்தைய மேல்முறையீட்டுத் தீர்ப்பை 2025 அக்டோபரில் உறுதிசெய்தது.
35 ஆண்டுகளைக் கடந்த நெடிய சட்டப் போராட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சுமித்ராவுக்கு அதிர்ச்சியளித்தது. இருந்தபோதும் மனம் தளராமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. “பாலினத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்குப் பணி வாய்ப்பை மறுப்பது, அதுவும் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமே அதுபோல நடந்துகொண்டது பெண்ணினத்தை அவமதிக்கும் செயல்.
தங்களது வீடுகளில் அன்றாடம் எரிவாயு சிலிண்டரைத் தூக்கி, இணைப்பை மாற்றுகிறவர்கள் பெண்களே. அப்படி இருக்கையில் சுமித்ராவால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்று எப்படி ஐ.ஓ.சி. முடிவுசெய்யலாம்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சுமித்ராவுக்குத் தற்போது 63 வயதாவதால் அவருக்குப் பணி வழங்க முடியாது என்பதால் 12 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வழக்கறிஞர் சமரசத்துக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால், வழக்கை முடிக்காமல் 35 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்ததையும் வழக்கின் உண்மைத் தன்மையையும் கருத்தில் கொண்டு நீதிபதிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.