

குளோரியா சின்யெரெ ஒக்கு
இடது மார்பில் புற்றுக்கட்டியைக் கண்டறிந்த போது பிற்காலத்தில் நோயாளர்களின் நல ஆர்வலராக மாறுவோம் என்று நைஜீரியாவின் ‘குளோரியா சின்யெரெ ஒக்கு’ நினைத்திருக்க மாட்டார்.
பத்தாண்டுகளுக்கு முன் குளோரியாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியானது. 32 வயதான அவருக்கு இனித் தான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்கிற பயம் வந்துவிட்டது. இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டுப் படித்துப் பெற்ற பல்கலைக்கழகப் பட்டமும் மூன்று குழந்தைகளும் அவர்களின் எதிர்காலமும் குளோரியாவின் நினைவுக்கு வந்தன. உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் மார்பை அகற்றுவதைத் தவிர உயிர்பிழைக்க வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், நாட்டு வைத்தியரால் குணப்படுத்திவிட முடியும் என்றார் குளோரியாவின் அம்மா. பிரார்த்தனையால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை என்று அவரின் நண்பர்கள் தேவாலயங்களுக்குப் போகச் சொன்னார்கள். அறுவைசிகிச்சை செய்துகொள்வதா, நாட்டு வைத்தியரிடம் செல்வதா, கடவுளிடம் சரணடைவதா என்கிற குழப்பம் குளோரியாவைச் சூழ்ந்தது.