

ஏஐ படம்
சிறுகதைப் போட்டியொன்றின் நடுவராகச் செயல் படுகையில் அங்கு வந்து சேர்ந்த கதைகளில் ஒன்று என் மனதில் ஒட்டிக்கொண்டது. வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் உள்ள பெண் ஒருவருக்குப் பெண் குழந்தை இருக்கிறது. தனிப் பெண்ணாக அக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இவருக்குரியதாக இருக்கையில் தாய் வரும் வரையிலும் தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு குழந்தையிடம் இருக்கிறது. சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வரும் சிறுமிக்கு அன்றாடம் தாயிடம் கதை சொல்லும் பழக்கம் இருக்கிறது.
பள்ளியை விட்டு வரும்போது அவளுக்கு மிட்டாய் கொடுப்பவர்களை நேரடியாகத் தாயிடம் சொல்லத்தெரியாமல் ‘எனக்கு மிட்டாய் தரும் நாய்க்குட்டியைப் பிடிக்கவில்லை’, ‘எனக்கு பிஸ்கட் தரும் யானையைப் பார்க்கும்போதெல்லாம் பயமாக இருக்கிறது’ என்று சொல்லுமாம் அக்குழந்தை. ஆரம்ப நாள்களில் வேலையின் அழுத்தத்தில் மூழ்கியிருந்த அம்மாவுக்கு மகளின் கதை புரியவில்லை. அதை ஆராயவும் விரும்பவில்லை. ஏதோ சொல்கிறாள் என விட்டுவிட்டார். ஒருநாள், ‘அம்மா எனக்கு பிஸ்கட் தரும் யானை அதோ அதோ’ என அச்சத்தோடு சொல்லுகையில், அங்கே தென்பட்ட மிகவும் பரிச்சயமான மளிகைக்கடைக்காரனைப் பார்த்தார் அம்மா. அப்போதுதான் அந்த அம்மாவுக்குத் தன் மகள் அனுபவிக்கும் துன்பம் புரிகிறது.