

படங்கள்: நா.தங்கரத்தினம்
விருந்துக்குப் பிறகு செரிமானத்துக்காக வெற்றிலையைச் சுவைக்கும் நம் மரபு, மதுரையைச் சேர்ந்த வனிதா நாச்சியாரைத் தொழில்முனைவோராக ஆக்கியுள்ளது. மதுரையில் 30 ஆண்டுகளாக பீடா கடையை வெற்றிகரமாக நடத்திவருவதோடு, பல பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மேலக் கோபுரத் தெருவில் உள்ள நிஷா பீடா கடை, வனிதாவின் உழைப்புக்குச் சான்றாக இருக்கிறது. தன் கணவர் எஸ்.சுந்தரின் உறுதுணையோடு இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வனிதா. நாளுக்கு ஒரு புதுச்சுவை புழக்கத்துக்கு வரும் இந்நாளில் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் 20 வகையான பீடாக்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.
மேலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல பெண்களுக்கு பீடா தயாரிக்கும் தொழில்நுணுக்கத்தையும், அதைத் தயாரிப்பதற்குத் தேவையான கொல்கத்தா வெற்றிலை உள்ளிட்ட மூலப்பொருள்களையும் விற்பனை செய்துவருகிறார். அவரது கடையில் பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, தொழிலைக் கற்றுத் தந்ததன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளார் வனிதா.