

பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) அண்மையில் வெளியிட்ட உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் பெலிண்டா பென்சிக், எலினா ஸ்விட்டோலினா ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் இருவருமே பிள்ளைப் பேற்றுக்குப் பிறகும் விளையாட்டில் தங்களது இடத்தை உறுதிசெய்துள்ளனர்.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெலிண்டா, 2023ஆம் ஆண்டில் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொண்ட பிறகு முதல் முறையாக இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். உக்ரைனிய வீராங்கனை எலினாவும் இவரோடு டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளார். வீராங்கனைகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் - குழந்தைப்பேறு உள்ளிட்டவை அவர்களது விளையாட்டு வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகப் பெண்கள் டென்னிஸ் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.