

ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் கணவரோடு சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா செல்வதால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் புதுப்புது இடங்கள், மனிதர்கள், அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை போன்றவற்றையும் அறிய முடிவதால் கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு மே மாதத்தில் அசாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றோம். நிலப்பரப்பில் மட்டுமல்ல; தோற்றத்திலும் தனித்துத் தெரிகின்றனர் இங்குள்ளவர்கள்.
அசாமிலிருந்து தேஸ்பூர் செல்லும் வழியில் பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்ததும், “இங்குள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியைப் பார்க்க முடியுமா?” என்று வாகன ஓட்டுநரிடம் கேட்டேன்.
நான் கேட்டதை ஆச்சரியத்துடன் உறுதிப்படுத்திக்கொண்டு, வழியில் இருந்த ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் வண்டியை நிறுத்தினார். வாகன ஓட்டுநர் எங்களை அறிமுகப்படுத்திய பிறகு நாங்கள் பள்ளிக்குள் சென்றோம். தலைமை ஆசிரியையிடம் உதவி ஆசிரியர் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்று கூறியதும் மிகவும் மரியாதை கொடுத்து அன்பாகவும் இனிமையாகவும் பேசினர்.