

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கப் பதக்கங்களை வென்றது. இதில் ஜூடோ பிரிவில் 23 வயதான இந்திய வீராங்கனை அஸ்மிதா டே வென்ற தங்கப் பதக்கம் சிறப்பு வாய்ந்தது. ஆம், காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ விளையாட்டில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது. அதைச் சாத்தியமாக்கிய அஸ்மிதாவின் ஜூடோ வெற்றிக் கதை பிரமிப்பானது.
இந்தியாவுக்குப் பதக்க வாய்ப்பே இல்லாத விளையாட்டு ஜூடோ. ஆனால், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்தியா வென்றது. அதில், முத்தாய்ப்பாக முதல் தங்கப் பதக்கத்தை 48 கிலோ எடைப் பிரிவில் அஸ்மிதா வென்றது, அவரைத் தேசத்தின் நாயகியாக உயர்த்தியிருக்கிறது.
கடும் போட்டி நிறைந்த இறுதிப் போட்டியில், கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் வெளிப்படுத்தி, கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து அஸ்மிதா தங்கத் தாரகையானார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தன்னைப் பிரநிநிதித்துவம் செய்துகொண்டாலும், அஸ்மிதா வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்தவர்.
வறுமையை மீறி வெற்றி: சிறுவயதில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தார் அஸ்மிதா. ஏழ்மையான குடும்பம், மண் குடிசை, தினசரி ரூ.300 சம்பாதிப்பதற்காக அல்லாடும் தந்தை என்பதுதான் அவருடைய அடையாளம். அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராடிய அவருடைய தந்தை கிருஷ்ணகுமார் டே, மகளின் விளையாட்டு ஆர்வத்துக்கு மட்டும் தடைபோடவில்லை.
அப்போது அஸ்மிதா ஓட்டப் பந்தயத்தில் பேரார்வம் கொண்டிருந்தார். ஆனால், அஸ்மிதாவின் விளையாட்டு ஆசையை அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் முடக்கிப்போட்டது. அவரைத் தேற்றத் தன்னிடம் இருந்த சொற்பச் சேமிப்பையும் இழந்து டெல்லிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார் அவரது தந்தை.