

அரசமைப்பு, எந்த அரசனின் பெயராலும் தொடங்க வில்லை; ஆட்சியாளரின் பெயராலும் தொடங்கவில்லை; மதத்தின் பெயராலும் தொடங்கவில்லை. அது மக்களின் பெயரால் தொடங்கியது - ‘இந்திய மக்களாகிய நாம்!’ அக்டோபர் 17, 1949 அன்று அரசமைப்பு அவை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை குறித்து விவாதித்தது. அப்போது முக்கியமான கேள்வி எழுந்தது: ‘இந்த அரசமைப்பின் அதிகாரம் மக்களிடமிருந்து வருவதாக முகப்புரை கூறுகிறதா?’ அம்பேத்கர் அதற்குத் தெளிவாகப் பதிலளித்தார்.
முகப்புரையில் உள்ள ‘We, the People of India… adopt, enact and give to ourselves this Constitution’ என்கிற வரியைச் சுட்டிக்காட்டி, ‘அரசமைப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இயற்றப்பட்டு, மக்களுக்கே அது வழங்கப்படுகிறது’ என்பதே அதன் பொருள் என்று அவர் விளக்கினார். இதைப் படித்துக்கொண்டிருந்த தமிழரசிக்கு எழுந்த சந்தேகம் கேள்வியாக முளைத்தது.
தமிழரசி: கலைவாணி அக்கா, இந்திய அரசமைப்பின் முகப்புரை ஏன் ‘இந்திய மக்களாகிய நாம்’ (We, the People of India) என்று தொடங்குகிறது? ‘இந்திய அரசு’ என்றோ ‘நாடாளுமன்றம்’ என்றோ தொடங்கியிருக்கலாமே?
கலைவாணி: அதில்தான் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவே இருக்கிறது, தமிழரசி. அரசமைப்புச் சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டம்; அதற்கு உட்பட்டே நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனால், அரசமைப்புக்கே அதிகாரம் கொடுத்தது யார் என்றால், மக்கள். ‘இந்திய மக்களாகிய நாம்’ என்கிற அந்த மூன்று சொற்களில்தான் இந்திய ஜனநாயகத்தின் உயிரே அடங்கியிருக்கிறது. அதனால்தான் முகப்புரை, அரசமைப்பை நமக்கு நாமே ‘ஏற்று, இயற்றி, வழங்கிக்கொள்கிறோம்’ என்று பிரகடனம் செய்கிறது.