

சேவை அறியும் உரிமைச் சட்டத்தைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டுவர வேண்டும் என்பது தமிழரசியின் விருப்பம். ஆனால், அது சார்ந்து அவருக்குச் சில விளக்கங்கள் தேவைப்பட்டன. அவற்றை கலைவாணியிடம் கேட்டார்.
தமிழரசி: இந்திய அரசமைப்பின் 21ஆம் பிரிவு உறுதிசெய்யும் வாழ்வுரிமை என்பது வெறுமனே உயிர் வாழ்வது மட்டுமல்ல; கண்ணியத்துடன் வாழும் உரிமையாகும். ஆனால் பட்டா, சான்றிதழ், குடிநீர், மின் இணைப்பு போன்ற அடிப்படைச் சேவைகளுக்காக அரசு அலுவலகங்களில் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு லஞ்சம் கேட்கப்படுவது அரசமைப்பின் ஆன்மாவையே சிதைக்கிறது.
ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னான் கூறியதுபோல, ஊழல் ஒரு நச்சுக் கொள்ளைநோய்; அது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குலைக்கிறது. உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜிம் யோங் கிம், ‘வளரும் நாடுகளின் முதல் எதிரி ஊழல்தான்’ என்று எச்சரித்தார்.
அரசு ஊழலை ஒழிக்க விரும்புவதாலும் அப்படி ஒழிப்பதாக உறுதி அளித்துள்ளதாலும் மக்கள் கண்ணியத்துடன் சேவை பெறுவதை உறுதிசெய்யும், ‘சேவை அறியும் உரிமைச் சட்ட’த்தைத் தனிநபர் மசோதாவாக நான் கொண்டுவர விரும்புகிறேன். இது அரசுக்கு மட்டுமே உரிய அதிகாரமா?
கலைவாணி: இல்லை. அமைச்சரல்லாத எந்தச் சட்டமன்ற உறுப்பினரும் பொதுநலன் கருதித் தனிநபர் மசோதா மூலம் புதிய சட்டத்தை முன்மொழியலாம்.