

சட்டமன்ற விவாதங்கள் குறித்து தமிழரசிக்கு ஏராளமான கேள்விகள். அவற்றுக்கு விளக்கமாகப் பதில் அளித்தார் கலைவாணி.
தமிழரசி: அக்கா, சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் உண்மையிலேயே மக்களின் வாழ்க்கையை மாற்றுமா, இல்லையென்றால் அவை வெறும் பேச்சுகள்தானா?
கலைவாணி: நல்ல கேள்வி, தமிழரசி. சட்டம் என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தையல்ல; அது மனிதனின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் காக்கும் சமூகக் கருவி. அதனால், ஒரு சட்டமன்றம் என்பது வரி விதிக்கும் இடமோ செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் இடமோ மட்டும் அல்ல. அநீதிக்கு எதிராகக் குரல் எழும் ஜனநாயக அரங்கம் அது.
நம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாறும் அதைத்தான் சொல்கிறது. சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த தீண்டாமை, பாலினப் பாகுபாடு, மூடநம்பிக்கை, சாதி ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிராகப் போராடிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்களுக்கு இந்த அவை சாட்சியாக இருந்திருக்கிறது.
தமிழரசி: எடுத்துக்காட்டு சொல்ல முடியுமா?