

தமிழ் நாடக மரபில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள செவ்வியல் நாடகம் ‘அல்லி சரித்திரம்’. வீரமும் அழகும் நிறைந்த, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மதுரை ராணி என வாய்மொழி மரபுக் கதைவழி தமிழர்களால் நம்பப்பட்டுவரும் அல்லி சரத்திரம், தொடக்கத்தில் அரசவைகளிலும் பின்னர் பொதுவெளிக் கூத்து மரபிலும் காலங்காலமாக நிகழ்த்தப்பட்ட நாடக வரலாற்றைக் கொண்டது. தமிழ் நாட்டார் வழிபாட்டு மரபிலும் இந்த நாடகத்துக்குத் தனித்த இடமுண்டு.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் நாடகத் தலைமை யாசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளின் எழுத்தில் முறையான பிரதியாக, உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகப் பனுவல் இது.
அதை, தற்காலக் குழுக்கள் எடுத்து மீள் அரங்கேற்றுவது துணிச்சலான நாடகச் செயல்பாடு. அதைக் கலைத்துணிவுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது சென்னையை சேர்ந்த ‘தேவிரிக் ஷா’ (Devriksha) நவீன நாடகக் குழு. எப்போதோ நிகழ்ந்த ஒரு செவ்வியல் கதையை, சமகாலப் பார்வையுடன் மேடையேற்றிய இந்தக் குழுவின் நடிப்புப் பயிற்றுநர் ஸ்ரீதேவி, இந்த நாடகத்தை நவீன நாடக அரங்கமொழியில் இயக்கியிருந்தார்.
ஆணாதிக்கம் கட்டமைத்த பெண்மை, திருமணம், குடும்பம் சார்ந்த மரபான கருத்தாக்கங்களுக்குச் சவால் விடுக்கும் அல்லி ராணியின் ஆளுமை, இன்றைய காலத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய பல கேள்விகளை எழுப்புகிறது. அழகையும் வீரத்தையும் ஒருங்கே கொண்டவளாக மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையின் முடிவுகளைத் தானே தீர்மானிக்கும் தற்சார்பு ஆளுமையாகவும் மேடையில் கம்பீரமாக உருக்கொள்கிறாள் அல்லி.