

என் மாமனார் பண்டரிநாதனைத் திருத்துறைப்பூண்டி காமராஜர் என்றே சொல்லலாம். கதர் ஆடை மட்டுமே அணிந்து எளிமையாக வாழ்ந்தவர். 13 வயதில் தன் அண்ணனின் நண்பரது ஜவுளிக் கடையில் தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். என் மாமாவை வழிநடத்தியவர் அவரின் அண்ணன். அவர் வைத்துக்கொடுத்த கதர் கடையும் பிறகு வைத்த மளிகைக்கடையும் என் மாமாவுக்குப் பிடிக்கவில்லை.
எங்கள் ஊரைச் சுற்றி கிராமங்கள் அதிகம், விவசாயமும் அதிகம். அதனால் தானியக் கடை வைத்துத் தானியங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவார். நேர்மையாக வியாபாரத்தை நடத்தியதால் எங்கள் ஊரின் குறிப்பிடத்தக்க வியாபாரிகளில் ஒருவராக ஆனார். பிறகு வியாபாரிகள் சங்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராக 13 ஆண்டுகள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவார். தனக்குத் தெரிந்தவரின் மகள் கண் மருத்துவம் படிக்க உதவினார். இப்போது அந்தப் பெண்ணின் மகனும் மகளும் மருத்துவர் களாக இருக்கிறார்கள்! எங்கள் ஊர் பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் நிதியுதவி அளிப்பார்.